Tuesday, April 30, 2013

அணு(Atom)



பதார்த்தம் ஒன்றின் இரசாயனத் தாக்கத்தில் ஈடுபடக்கூடிய மிகவும் சிறிய துணிக்கை அணுவாகும்.
இரசாயனத் தாக்கத்தில் எப்போதும் தாக்கிகளின் அணுக்களின் எண்ணிக்கை விளைவுகளின் அணுக்களின் எண்ணிக்கைக்குச் சமனாகும்.

சடப்பொருட்களின் மூவகை நிலைகளான திண்மம், திரவம், வாயு ஆகியவற்றின் மின் கடத்துதிறன்/மின்தன்மை போன்றவை இவ்வத்தியாயத்தில் ஆராயப்படும்.
சடப்பொருட்களை மேலும் சிறு பகுதிகளாகப் பிரித்துக் கொண்டு செல்லும்போது மேலும் பிரிக்க முடியாத மிகச்சிறிய துணிக்கை அணு என கி.மு 400 ஆம் ஆண்டளவில் கிரேக்கத் தத்துவஞானியாகிய டிமோக்கிரிற்றஸ் கூறினார்.
இதன் பின்னர் வந்த ஜோன் தாற்றன் (John Doltan) என்பவர் இக்கருத்துக்களை ஏற்றுக்கொண்டு அணுக்கொள்கையை வெளியிட்டார்.

தாற்றனின் அணுக்கொள்கை(Doltan’s Atomic Theory)
1. சடப்பொருளின் மேலும் பிரிக்கமுடியாத மிகச்சிறிய துணிக்கை
    அணுவாகும்.
2. அணுவை ஆக்கவோ அழிக்கவோ முடியாது.
3. ஒரே மூலகத்தின் அணுக்கள் அனைத்தும் எல்லா இயல்புகளிலும்
    ஒத்தவை. ஆனால் வெவ்வேறு மூலகங்களின் இயல்புகள்
    ஒன்றுக்கொன்று முற்றிலும் வேறுபட்டனவாகும்.
4. வேறுபட்ட மூலகங்களின் அணுக்கள் எளிய முழுஎண் விகிதத்தில்
    சேர்வதனால் சேர்வை உருவாகிறது.
அன்றைய காலகட்டத்தில் இக்கொள்கை ஏற்றுக்கொள்ளப்பட்டாலும் பின்னர் ஏற்பட்ட விஞ்ஞான வளர்ச்சியின் காரணமாக அக்கொள்கையின் குறைபாடுகள் பின்வருமாறு மாற்றியமைக்கப்பட்டது. எனினும் இரசாயனவியலில் பெரும்புரட்சியை ஏற்படுத்த அவரது அணுக்கொள்கை வித்திட்டது.

திருத்தியமைக்கப்பட்ட தாற்றனின் அணுக்கொள்கை
1. சடப்பொருட்கள் மேலும் பிரிக்கமுடியாததெனக் கூறப்பட்ட போதிலும்  
    சடப்பொருட்கள் மேலும் பிரிபடக்கூடியது எனினும் அது இலத்திரன்,   
    புரோத்தன், நியூத்திரன் எனும் பிரதான அடிப்படைத்துணிக்கைகளால்  
   ஆக்கப்பட்டது என பரிசோதனைகள் வாயிலாக அறியப்பட்டுள்ளது.
2.அணுவைப் பிளக்கமுடியும் எனக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன்போது
    உருவாக்கப்படும் பெருமளவு சக்தி ஆக்கபூர்வமான தொழிற்பாடுகளுக்குப்
    பயன்படுத்தப்படுகின்றது.
3. ஒரே மூலகத்தின் அணுக்கள் அனைத்தும் இல்புகளில் ஒத்தவையல்ல.
    Eg  :-   சமதானிகள்
4. வேறுபட்ட மூலகத்தின் இயல்புகள் ஒன்றுக்கொன்று வேறுபட்டவையல்ல.
    Eg  :-   சமபாரங்கள்
5.மூலக அணுக்கள் சேர்ந்து சேர்வைகளை உருவாக்கும்போது மூலக
   அணுக்களுக்கிடையிலான விகிதம் எளிய முழுவெண் விகிதத்தில் அமையும்
   என்பது சிறிய சேர்வைகளுக்குப் பொருத்தமானது. எனினும் பாரிய
   சேர்வைகள் கருதப்படும் போது இம் விதிமுறையானது மீறப்படுகின்றது.


சடப்பொருட்கள் (Matters)

திணிவைக்கொண்டதும், இடத்தை அடைத்துக் கொள்ளக் கூடியதுமான பொருட்கள் சடப் பொருட்கள் எனப்படும்.

சடப்பொருட்கள் சூழலில் பின்வரும் மூவகை நிலைகளில் காணப்படுகின்றன.
1. திண்மம் (Solid)
2. திரவம் (Liquid)
3. வாயு (Gas)
இச்சடப்பொருட்களின் மூவகை நிலைகளும் சக்தியை ஏற்றோ,இழந்தோ ஒரு நிலையில் இருந்து இன்னொரு நிலைக்கு மாற்றமடையக்கூடியன.
சடப்பொருட்களின் துணிக்கை மாதிரியுரு
சடப்பொருட்களின் பௌதீக நிலைகளில் துணிக்கைகள் அமைந்துள்ள விதத்தைக்காட்டுகின்ற கற்பனை வடிவம் துணிக்கை மாதிரியுரு எனப்படும்.
இத்துணிக்கை மாதிரி உருவை அடிப்படையாகக் கொண்டு சடப்பொளின் பௌதீக நிலைகளுக்கான இயல்புகள் ஒப்பிடப்படுகிறது.

சடப்பொருட்களின் தொடர்ச்சியற்ற தன்மை

சடப்பொருட்கள் தொடர்ச்சியானது என அரிஸ்ரோட்டில் கூறினார். எனினும் சடப்பொருட்களை எண்ணில் அடங்காதவாறு பிரிக்கமுடியும் எனக் கருதினார்.
எனிம் இதன் பின்னர் வந்த டிமோக்கிரட்டீஸ் சடப்பொருட்கள் தொடர்ச்சியற்ற மிகச்சிறிய துணிக்கைகளால் ஆக்கப்பட்டது எனக் கூறினார். இதற்கு விஞ்ஞானப் பரிசோதனைகளும் ஆதாரமாக அமைந்தன.

சடப்பொருட்களின் தொடர்ச்சியற்ற தன்மையை மூன்று வகையாகப் பிரிக்கமுடியும்
1. திண்மங்களின் தொடர்ச்சியற்ற தன்மை
2. திரவங்களின் தொடர்ச்சியற்ற தன்மை
3. வாயுக்களின் தொடர்ச்சியற்ற தன்மை

திண்மங்களின் தொடர்ச்சியற்ற தன்மை
1.கலப்புலோகம் தோன்றுதல்
   Eg:- செப்பு + நாகம் = பித்தளை
2.மணக்கின்ற நப்தலீன் உருண்டை படிப்படியாகத் தேய்வடைதல்
3.கதிர்த்தொழிற்பாட்டு மூலகங்கவில் இருந்து வெளிவிடப்படும்
   கதிர்த்துணிக்கைகள் பளோரொளிர்வுத் தட்டுக்களில் விட்டுவிட்டு
   மின்னுகின்ற ஓளிர்வைத் தருகின்றது.
4.திண்மப் பளிங்கு ஒன்றின் ஊடாக X - கதிர்களைச் செலுத்தி வெளிப்படும்
   கதிர்களை ஒளிப்படத்தாளில் (Photo Film)  படம் பிடிக்கும் போது திட்டமான
   வடிவத்தில் அமைந்த ஒளிப்பொட்டுக்கள் தோன்றுவதை அவதானிக்கலாம்.
திரவங்களின் தொடர்ச்சியற்ற தன்மை
1.கண்ணாடிப்பாத்திரம் ஒன்றினுள் வைக்கப்பட்ட நீரினுள் திண்மத்துணிக்கை
   ஒன்று அங்குமிங்கும் அசைதல்.
2.நீரினுள் மகரந்த மணிகளைக் கரைத்து அதன் ஒரு துளியை
  நுணுக்குக்காட்டியினூடாக அவதானிக்கையில் மகரந்த மணித்துணிக்கைகள்
  அங்குமிங்கும் அசைவதனை அவதானிக்கலாம். இது பிறவுணியின் அசைவு
  எனப்படும்.

3.முற்றாகக் கலக்கும் இரு திரவங்களை ஒன்றுடன் ஒன்று சேர்க்கையில்
   கனவளவு மாற்றம் நடைபெறுகிறது.
   Eg:-  எதனோலும் நீரும்
4.நீரினுள் இடப்பட்ட தேன் துளி ஒன்றின் நிறம் நீரினுள் பரவிச் செல்வதை
   அவதானிக்கலாம்.

வாயுக்களின் தொடர்ச்சியற்ற தன்மை
1.கபில நிறமுடைய NO2 வாயுவை பரிசோதனைக் குழாய் ஒன்றினுள் எடுத்து
  இன்னொரு பரிசோதனைக் குழாயினால் மூடுகையில் NO2 வாயுவின்
  கபிலநிறம் அக்குழாய் முழுவதும் பரவிச் செல்வதனை அவதானிக்கலாம்.
2.கபில நிறமான Br2 வாயு வளிமண்டலத்தில் விடப்படுகையில் இலகுவாகப்
   பரவிச் செல்கிறது.
3.மணமுடைய H2S(aq) or NH3(aq)  ஐ வளிக்குத் திறந்து வைக்கும் போது
  அதன் மணம் பரிசோதனைக் கூடம் முழுவதும் பரம்பலடைவதை
  உணரமுடியும்.
4.பலூன் ஒன்றினுள் அடைக்கப்பட்ட வாயுவை அமுக்குவதன் மூலம் அதன்
   கனவளவு குறைகிறது.